மன்னாரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது _பொதுமன்னிப்பு பெற சென்றவர்களை திட்டமிட்டு கைது செய்த பொலிஸ்!
>> Sunday, 20 September 2009
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மாத்தகிராமம் ஆகிய கிராமங்களில் பதுக்கிவைத்து வேட்டைக்கு பயன் படுத்தி வந்த சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தயாரித்த இடியன் என அழைக்கப்படும் வேட்டைத் துப்பாக்கிகள் 21 ஐ மன்னார் பொலிஸார் பரிமுதல் செய்ததோடு அதனை தன்வசம் வைத்திருந்த 20 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னிக்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னா நானயக்காரவின் வேண்டுகோளுக்கமைவாக மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி சி.கொடிதுவக்கு வின் ஆலோசனைக்கமைவாக மன்னார் பொலிஸார் மேற்படி கிராமங்களில் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் மடுப்பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதனைப் பார்வையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கைது நடவடிக்கைகள் குறித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தவை வருமாறு:
”நாங்கள் வேட்டைக்கென உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இடியன் என அழைக்கப்படும் துப்பாக்கிகளை வேட்டைக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றோம். மனிதர்கள் எவருக்கும் இத்துப்பாக்கிப் பாவனையால் பாதிப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
இநிலையில் மடு பொலிஸார் எமது கிராமத்துக்கு வந்து வேட்டைத் துப்பாக்கியை பயன்படுத்த சட்ட பூர்வமான அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருகின்றனர் என்றும் பொலிஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
அவர்களை நம்பிச் சென்றவர்களை கைது செய்து விட்டனர். நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டனர்.”




