இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் போன்றவற்றின் ஆதரவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி
>> Tuesday, 1 December 2009
09.01.2010 அன்று செட்டிகுளம் மெனிஃபாம் புனர்வாழ்வு முகாமிலிருந்து 712 பிள்ளைகளை விடுவிக்கும் நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் நிகழ்த்திய உரையில் அரசின் அணுகுமுறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வரவேற்கின்றோம் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்;
கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக அகில இலங்கை இந்து மாமன்றம், மக்கள் பணியே மகேஸ்வரன் பூசை என்பதனை மறவாது மனித நேய நிதியம், இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் போன்றவற்றின் ஆதரவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏனைய சகோதர, சகோதரிகளுக்கும் எம்மாலான உதவிகளையும் ஆதரவையும் வழங்கி வந்திருக்கிறோம். தொடர்ந்தும் அப்பணியை இறை பணியாகச் செய்வோம்.
நிவாரணப் பணிகளுடன் நின்றுவிடாது இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளையும் கோரிப் பெற்றுக்கொடுக்க உழைத்து வருகிறோம். நாங்கள் விடுத்த கோரிக்கைகள் பல; சிலவற்றுக்கு சாதகமான பதில் பெற்று நடவடிக்கை எடுக்க வழி வகுத்தோம்.
உடன் பிறப்புகளே, நீங்கள் எல்லோரும் சொந்த இடங்களுக்குத் திரும்பி வழமை வாழ்வு ஆரம்பிக்க வேண்டும். தங்களை பெற்ற பெற்றோர்களுடன் குழந்தைகள் சேரவேண்டும், கரம்பிடித்த கணவன்மாருடன் மங்கைகள் வாழ வேண்டும்.
பெற்ற செல்வங்களுடன் முதியோர் இணைய வேண்டும். முகாம்களிலும் சிறைகளிலும் அடைபட்டுக்கிடக்கும் அப்பாவி மக்கள் தாமதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இன்றைய நிகழ்வு அந்த அணுகுமுறைக்கு வரப் போகும் நல்ல காலத்திற்கு விடிவெள்ளியாக அமையட்டும்.
புனர்வாழ்வு முகாம்களில் இருந்த மாணவர்களுக்கு கல்வி வசதி அளிக்க உதவுமாறு நீதி அமைச்சர் கேட்டபோது தயங்காது அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்று உரிமை கொண்டாடி அந்தப் பொறுப்பை ஏற்றோம்.
எங்கள் இனத்தை வாழ வைப்பது கல்விச் செல்வம். அந்தச் சரஸ்வதி தேவி தந்த அருளால்தான் நான் இன்று உங்கள் முன்னிலையில் எழுந்து நிற்கிறேன்.
ஏதோ இறையருளால் சில வசதிகள் பெற்ற நாங்கள் எங்கள் உடன்பிறப்புகள் அல்லலுறும் போது அவர்கள் எங்கள் சகோதர, சகோதரிகள் என்ற அன்புடன் உதவ வேண்டும் என்பதனை மறக்கவில்லை. எனவே துணிந்து தயங்காது 270 க்கு மேற்பட்ட எங்கள் பிள்ளைகளை புனருத்தாரண முகாம்களிலிருந்து வரவழைத்து கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்விகற்க வசதி செய்தோம். இன்று அவர்களில் 67 பேருக்கு விடுதலை. மற்றவர்களுக்கும் கூடிய சீக்கிரம் விடுதலை.
எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்து சமூக நலன் அமைச்சினால் திருக்கேதீச்சர சூழலில் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பல வசதிகள் செய்து தர ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ முன்வந்துள்ளார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்.
மாற்றம், மாற்றம் என்பது இன்று சர்வதேசம் எங்கும் எதிரொலிக்கும் கோஷம். ஆட்களை மட்டும் மற்றினால் போதாது, மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களே, கடந்த சில மாதங்களில் தங்களினதும் தங்கள் அரசாங்கத்தினதும் அணுகுமுறைகளில் மாற்றங்களை வரவேற்கிறோம்.
அந்த அணுகுமுறைகளில் மேலும் முன்னேற்றம் தேவை. அல்லலுறும் மக்களுக்கு விடிவு வேண்டும். அதுதான் கூறினேன் ஆட்கள் மாறுவதில் பயனில்லை. அணுகுமுறைகள் மாற வேண்டும். அதுவே இன்றைய தேவை.
இடம்பெயர்ந்து அல்லலுறும் எங்கள் உடன் பிறப்புக்களே உங்களுக்கு கூடிய சீக்கிரம் விடிவு பிறக்கட்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது அயரா நம்பிக்கை. அதற்கு வழிவகுக்க வேண்டும் என இம் மேடையில் மாண்புமிகு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமிழ் சமூகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தை பிறந்தால் வழி பிறக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். எல்லோரின் அணுகுமுறைகளிலும் மாற்றம் நடக்க ஆண்டவன் அருள் வேண்டி நிற்கிறோம்.
எங்கள் மக்கள் குறிப்பாக வட கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் எம்மவர் பொதுவான கலாசாரம், பண்பாடு பேணி வாழ்பவர்கள். அதற்கும் மேலாக தமிழ் மொழி பேசி வாழும் தமிழன்னையின் தவப் புதல்வர்கள். அவர்கள் அந்த அடையாளத்தைப் பேணி வாழ வேண்டும் எனத் தெரிவித்தார்.