மடு - தலைமன்னார் தொடருந்துப் பாதை புனரமைப்பு விரைவில் ஆரம்பம்
>> Tuesday, 1 December 2009
மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தொடருந்துப் பாதை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
மடு - தலைமன்னார் தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை இந்திய நிறுவனம் ஒன்று மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான உடன்பாடு அண்மையில் புதுடெல்லியில் கையெழுத்திடப்பட்டது. இந்தப் பாதை அமைக்கும் பணிக்கு 150 மில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
63 கி.மீற்றர் நீளமுடைய இந்தத் தொடருந்துப் பாதை அமைப்பு வேலைகள் இரண்டு வருடங்களுக்குள் முடிந்து விடும் என்று சிறிலங்கா தொடருந்துத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக தொடருந்துப் பாதைகள், பாலங்கள் மற்றும் தொடருந்து நிலைய மேடைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் முருங்கன், மன்னார், பேசாலை, தலைமன்னார், தலைமன்னார் இறங்குதுறை ஆகிய இடங்களில் பிரதான தொடருந்து நிலையங்களும், மாதோட்டம், திருக்கேதீஸ்வரம், தோட்டவெளி ஆகிய இடங்களில் துணை தொட,ருந்து நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.