கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

வாக்களிப்பு நிலவரங்கள்

>> Wednesday, 30 December 2009

மன்னார்

“மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்.”

யாழ்ப்பாணம்

“காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.”

மலையகம்

“மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.”

கொழும்பு

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP