மன்னாரில் இரவு மீன்பிடி தொழிலுக்கு மீண்டும் தடை; மீனவர்கள் விசனம்
>> Friday, 18 December 2009
மன்னார் மாவட்டத்தில் இரவு நேர மீன் பிடிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் நேற்று இரவு முதல் மறுக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளில் இரவு நேர மீன் பிடிப்புக்கான அனுமதியினை கடற்படையினர் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையுமே கடலில் தொழில் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ‘பாஸ்’ நடைமுறையும் அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் தாமதத்தின் மத்தியிலே தற்போது தொழிலுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் போது இரவு நேர மீன் பிடி தடை நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு மீனவர்கள் தொழிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் இரவு நேர மீன் பிடி தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமை மன்னார் மீனவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது