மதவாச்சி - தலைமன்னார் தொடருந்துப் பாதை புனரமைப்பு இந்திய நிறுவனத்திடம்
>> Saturday, 12 December 2009
மதவாச்சியில் இருந்து மடு ஊடாக தலைமன்னார் வரை, 106 கி.மீ தூர தொடருந்துப் பாதையை 2530 கோடி ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தத் திட்டத்தின் கீழ் தொடரூந்துப் பாதை அமைக்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.
மதவாச்சியில் இருந்து மடு வரையான 43 கி.மீ தூரமான பாதை அமைக்கும் பணிகள் இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். இதற்காக 891 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.
வவுனியா - நேரியகுளம் கோவிலுக்கு அருகில் உப தொடருந்து நிலையம் ஒன்றும் அமைக்கப்படும்.
மடுவில் இருந்து தலைமன்னார் இறங்குதுறை வரையிலான 63 கி.மீ நீளமான தொடருந்துப் பாதை 1639 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளும் இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும்.
மடுவுக்கும் தலைமன்னார் இறங்குதுறைக்கும் இடையில் மாதோட்டம், திருக்கேதீஸ்வரம் மற்றும் தோட்டவெளி ஆகிய மூன்று இடங்களிளில் உப தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த நிர்மாணப் பணிகளை சர்வதேச அளவில் செயற்படும் இந்திய நிறுவனம் ஒன்றே மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையான தொடரூந்துப் பாதையைப் புனரமைக்கும் வேலையையும் இந்தியாவே பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.