டெங்கு நோயை கட்டுப்படுத்த மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
>> Saturday, 12 December 2009
மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டிக்கோட்டு மேற்கு, ஜோசப் வாஸ்கேர் பகுதியில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான காரணங்கள் அதிகளவில் காணப்படுவதனால் மன்னார் நகர சபை இவ் விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:-
இக்கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகாலமைப்பு வேலைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.இதனால் வடிகாலமைப்பு சீரற்று காணப்படுகின்றது.
தற்போது அந்த வடிகாலில் உள்ள கழிவு நீர் தேங்கி நுளம்பு பெருகி வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை.தற்போது இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது.
எனவே இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இதைக் கட்டுப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த எட்டு தினங்களுக்குள் மன்னாரில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் டெங்கு நோயால் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.