கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பரீட்சையில் சித்தியடைவேன் என நம்பிக்கை இருந்தது ஆனால் சாதனை படைப்பேன் என நான் நம்பவில்லை

>> Sunday 20 September 2009


வன்னியில் இடம்பெற்ற போரழிவுகளுக்குள் சிக்கி நாளுக்கு நாள், இடப்பெயர்வுகளைச் சந்தித்து உயிர் மட்டும் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியா அருணாச்சலம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சொந்த இடமாகவும் தற்போது யாழ்.பழைய பூங்கா வீதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மாணவி செல்வி செலஸ்ரின் சதுர்சியா 2009ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் இணைந்து கல்வியைத் தொடருகின்ற செல்வி சதுர்சியாவின் வியத்தகு சாதனையின் கருத்துக்களை இங்கு தொகுத்துத்தருகிறோம் படியுங்கள்:

புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் வென்ற மாணவி சதுர்சியா வழங்கிய செவ்வி

எனது அப்பா கமம் செய்பவர். அம்மா விட்டுப் பணி செய்பவர். நான் தரம் நான்கு வரை புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்றேன்.

வன்னியில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தினால் புதுக்குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்து இறுதியாக புதுமாத்தளன் வரை சென்றோம். இதனால் எனது கல்வி மேலும் தொடர முடியாத வகையில் சீர் குலைந்தது. புத்தகத்தை ஒரு நாள் கூட திறந்து படிக்க முடியாத மனநிலையில் நாம் இருந்தோம்.

எனது அப்பா எமது பாதுகாப்புக்காக சுமார் எட்டு பங்கர்கள் அமைத்திருந்தார். பங்கர்தான் எமது வாழ்விடம். முதலாவது பங்கருக்குள் பதுங்கியிருந்த போது படிப்போம் என்று புத்தகத்தைக் கையில் எடுத்தால் மனநிலை இடம் கொடுக்கவில்லை. ஏனெனில் அக்கம் பக்கம் எங்கும் அவலக் குரல்களே ஒலித்த வண்ணம் இருந்தன.

புதுமாத்தளன் பகுதியில் இறுதியாக தங்கியிருந்த போது நாம் உயிர் பிழைப்போமா? என்ற ஏக்கம் இருந்ததே தவிர படிப்பைப் பற்றிச் சிந்தித்ததேயில்லை. ஏதோ இறைவனின் செயலால் உயிர்பிழைத்தோம். அங்கிருந்து எங்களை வவுனியா நலன்புரி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். புலமைப் பரிசில் பரீட்சைக்கான காலம் நெருங்கிவிட்டது. ஆக நான்கு மாதங்கள்தான் இருந்தன. முடியுமானவரை படிப்போம் என்று பாடப்புத்தகத்தைத் தேடினால், அது இல்லை. ஒரு புத்தகம் தருவார்கள் அது எம்மிடம் மூன்று நாள்களுக்கு மட்டும் இருக்கும். பின்னர் சக மாணவியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சுழற்சி முறையில்தான் பாடப்புத்தகங்களைப் படிக்கமுடிந்தது.

முகாமில் இருந்து படிப்பதற்கு ஆரம்பத்தில் கதிரைகள் இல்லை. தரையிலும் மரத்தின் கீழும் கை விளக்கில்தான் படித்தேன். பின்னர் ஒரு மாத காலத்துக்குள்தான் கதிரையில் இருந்து படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அகதி முகாம்களுக் குப் பொருத்தப்பட்டுள்ள பொது மின்விளக்கில், மரத்தின் கீழ் இருந்து இரவு 9 மணி வரையும் படித்தேன்.

நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பார்த்தீபன் ஆசிரியர் எனக்கு விசேடமாக பாடங்களைச் சொல்லித்தந்தார். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவேன் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால், இவ்வாறு 175 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெறுவேன். என்று எதிர்பார்க்கவில்லை இதனை நினைத்துப் பார்க்கும் போது, நான் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தேசிய ரீதியிலே முதலிடத்தைப் பெற்றிருப்பேன் என்ற எண்ணம் எனக்கு இப்போது தோன்றுகிறது.
யாழ்ப்பாணம் வந்து எனது பெற்றோர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் இணைப்பதற்கு என்னை அழைத்துச் சென்றபோது கல்லூரியின் அதிபர் திருமதி ரி.துஷ்யந்தினி இன்முகத்தோடு வரவேற்று இடமளித்துள்ளார். அவருக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறேன். எனது எதிர்கால இலட்சியம் ஆசிரியராக வரவேண்டும் என்பதே. அவ்வாறான புனிதப் பணியில் எதிர்காலத்தில் என்னை இணைத்துச் சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டு மென்பது எனது சிறு வயதுக்கனவு. அது நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP