மன்னாரில் அழிவடைந்து வரும் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள்; புதிதாக முளைத்து வரும் பௌத்த விகாரைகள்!
>> Friday, 11 December 2009
மடுவில் இருந்து மன்னார் செல்லும் பிரதான வீதியில் பல பிரசித்திபெற்ற தொன்மையான இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பாழடைந்த நிலையில் கவனிப்பாரின்றி புனரமைக்கப் படாமல் உள்ளது.
இந்த நிலையில் இதே வீதியில் உள்ள சின்னம் சிறியதாக இருந்த பௌத்த விகாரைகள் இன்னும் பெரிதாக கட்டியெழுப்பப்படுவதுடன் பல புதிய பெளத்த விகாரைகளும் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.
இவ்வாறான விகாரை அமைக்கும் வேலைகளில் படைத்தரப்பை சேர்ந்தவர்களே முழு வீச்சாக ஈடுபட்டு வருகின்றனர். இவ் வீதியின் பல இடங்களில் பெளத்த துறவிகளுடன் சேர்ந்து படைத்தரப்பு அதிகாரிகள் புதிய விகாரையை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்கின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு பிரசித்திபெற்ற இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைக்கப்படாமல் பெளத்த விகாரைகள் புதிதாகக் கட்டுதல் மற்றும் பெரிதாகக் கட்டியெழுப்பும் பணிகளில் படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவது பெரும்பான்மையாக நெடுங்காலமாக அப்பகுதியில் வாழ்ந்துவரும் மன்னார் வாழ் தமிழ் மக்களுக்கு கவலைதரும் விடயமாக காணப்படுகின்றது.
மடு - மன்னார் வீதியின் சில இடங்களில் காலா காலமாக இருந்து வந்த தமிழ் ஆலயங்களில் தமிழ்க் கடவுள்களுடன் புத்தபெருமான் தனக்கும் ஒரு இடத்தைப் பங்கு போட்டுக் கொண்டுள்ளார்.