களம் தேடும் விதைகள்
>> Friday, 27 November 2009
மிடுக்கும், துடிப்பும், விவேகமும்
நிறைந்த இதயங்களே...
சமூகப் பாரத்தை
சாதீயத் தாழ்வை
மதக் கொடுமைகளை
மாறாத நல்லன்பை
தாங்கி நிற்குமெம் கருக்கள்
இவை
களம் தேடும் விதைகள்...
பாமரனின் உண்மைக் கதைகள்
புத்துலகம்
படைக்கத் துடிக்கும் சிசுக்கள்
இரத்தமும் சதையுமே
இதன் திசுக்கள்
எழுதுகோலுக்குள்
எம்மைத் திணிப்பதால்
எண்ணத்தைப் பதிப்பதால்
எவனெவனுக்கோ எரிகிறதாம்...
இடம்
பெயர்த்தவனை வருடி
பெயர்ந்தவனை எழுதி
நீலிக் கண்ணீர் விடும்
போலிகளில்லை நாம்
ஊதினால் பதராகும்
உமிழ்ந்தால் முகம் கோணும்
சராசரி விதைகளல்ல இவை
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது
கோட்டுப் படத்தோடு
கைகோர்க்கும் கவிதைக்கு
நல்லோரைப் பாடத் தெரியும்
நண்பருக்காய் வாடத் தெரியும்
நடிப்போரைச் சாடத் தெரியும்
ஓட்டுப் பெட்டிக்காய்
ஓடத் தெரியாது
முடியுமா தருவதற்கு
உங்கள் உள்ளங்களை
எம் எண்ணத்தை விதைக்க
மூலை முடுக்கெல்லாம்
முழங்கவே வந்தோம்
கவிதைகள் தந்தோம்..
களம் தேடும் விதைகளுக்கு
தளம் அமைக்க
தருவீரோ நிலங்களை
உங்கள் உளங்களை
பரப்புங்கள் எட்டுத் திக்கும் - எம்
பாசறையின் கொட்டுச் சத்தம்
--மன்னார் அமுதன்