கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் புதிய பாலம் இன்று ஜனாதிபதியால் திறப்பு

>> Monday, 26 October 2009

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்அமைச்சர் றிஷாட் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நீக்கிலாப்பிள்ளை மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மன்னார் பெருநிலப்பரப்பையும் தீவையும் இணைக்கும் பழைய பாலம் 1990 இல் தகர்த்தப்பட்டது. 1991இல் ஆர்.பிரேமதாச தற்காலிகப் பாலம் ஒன்றை அமைத்தார். பின் 2004 இல் இங்கிலாந்து அரசின் 25 கோடி ரூபா நிதி உதவியில் பாலவேலை ஆரம்பிக்கப்பட்டது.



2007 இல் ஜப்பான் அரசு வழங்கிய நிதியில் ‘மன்னார் சமாதான பாலம்’ என்ற பெயரில் 137 கோடி ருபா ஒதுக்கப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் இப்பாலத்தை நிர்மாணித்தனர். இரண்டரை வருடங்களுக்கு மேல் பால நிர்மாண வேலைகள் இடம்பெற்று வந்தன. அதி நவீன முறையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.



மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதற்குப் பாதுகாப்பு தரப்பினரால் மன்னார் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.



ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மன்னார் நகர்ப் பகுதி முழுவதிலும் பல நூற்றுக்கணக்கான பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும், கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை மன்னார் - தீவுப் பகுதி இடையிலான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன. காலை 11.30 மணிக்கு பிறகு மன்னாரின் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பின.









Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP