கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

நானில்லையென்றால்.... - மன்னார் அமுதன்

>> Tuesday, 15 September 2009

காலச் சக்கரத்தின்
கோரைப் பற்களில் சிக்கி
ஏதோவொரு மணித்துளியில்
நானும் மாண்டு போவேன்


என்றும்
சுற்றும் பூமி சுற்றும்
வெடித்த மொட்டு மலரும்


அஸ்தமனத்தின் பின்னரான
முன்னிரவில்
நிலா முளைக்கும்


அன்றும்
நீரில்லா நிலவில்
மாவரைத்து
வடை சுடுவாள் பாட்டி


சூரியனும்
கிழக்கே தான் உதிக்கும்


மேற்கே உதித்தாலும்
மறக்காமல்
நமக்கெல்லாம் வியர்க்கும்


மூன்றாம் நாட்களில்
காய்ந்து போன
ஆற்றின் சுவடாய்க்
கண்ணீர் வற்றிவிட


அவரவர் செயல் நோக்கி
சிந்தனைத் தூண்டல்களுடன்
உறவுகள் பறக்கும்


எட்டாம் நாளில்
ஒருமுறையும்...


முப்பத்தியொன்றாம் நாளில்
மறுமுறையும்...


அவர்களின்
செத்த நாக்குகளையும்
சொந்தங்களையும்
உயிர்ப்பிக்கும்
எனக்கான நினைவுகூறல்கள்


ஒருபொழுதில்
எனக்குப் பிடித்தவற்றை
விட்டுக் கொடுக்காதவர்கள்


தானே முன்வந்து
படையிலிடுவார்கள்
என்னைப் பிடிக்குமென்று


வாழ்கையில்
வாழ்த்தத் தெரியாதவர்க்கெலாம்
வாய்ப்பளித்து
வாய்மூடிக் கிடப்பேன்
நடுமுற்றத்தில்


அவர்கள் உதிர்க்கும்
பொய்களைக் கேட்க
செவியென்றும் திறந்தே இருக்கும்


மரமொன்று
வீழ்ந்து, காய்ந்து
கருகி மறைவதாய்
நானும் அழிவேன்


நானில்லா நிறையைச்
சமன் செய்ய
மற்றோர் தளிர் முளைக்கும்


சுற்றும் பூமி சுற்றும்
இன்னும் வேகமாய்


அன்றும் ஒருவன்
சொல்லிக்கொண்டிருப்பான்
“நானில்லையென்றால்...?”




தொடர்பு முகவரி:
http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Mannar%20Amuthan.html.

--
பணிவன்புடன்
வலைப்பதிவர் மன்னார் அமுதன்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP