கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

திருகோணமலை மாவட்டம்

>> Tuesday 15 September 2009

திருகோணமலை[அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.

அமைவிடம்
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு என்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன.

சனத்தொகை
2002 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருகோணமலை மாவட்டத்தில் 93, 441 குடும்பங்களைச் சேர்ந்த 384, 153 மக்களைக்கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரதில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருகோணமலையில், சுதந்திரத்துக்குப்பின் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள், சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைத்துவருவதாகத் தமிழர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.திருகோணமலையின் கரையோரப் பிரதேசங்களிலும் பெரும்பான்மையான சிங்கள் குடியேற்றங்கள் அரசாங்கத்தால் நடைபெறுகின்றன.

வரலாறு
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருகோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருகோணமலையே விளங்கியது.

இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.

நிர்வாகக் கட்டமைப்பு
திருகோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருகோணமலை நகரப்பகுதி
குச்சவெளி - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
பதவிசிறிபுர - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
கோமரன்கடவல - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமாரேசன்கடவை தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
மொரவேவா - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
தம்பலகாமம் - பெரும்பான்மையாகத் தமிழர்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
கந்தளாய் - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
கின்னியா - பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
சேருவில - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
ஈச்சிலம்பற்றை - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
மூதூர் - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டபிரதேசம். தமிழர்கள் உள்ளபிரதேசம் இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சி
1957 வரை திருகோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. இது தற்போது இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருகின்றது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன் இவை இலங்கை இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருகோணமலையே பிருத்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழகம்
திருகோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருகோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைகழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP